Waqf திருத்த சட்டத்தில் என்ன பிரச்னை? BJPயின் திட்டம் என்ன? | Decode | Amit Shah
WAQF Bill: ``இஸ்லாமியர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம்..'' - ஆர்பாட்டம் அறிவித்த திருமாவளவன்!
நாடாளுமன்றத்தில் நிறைவேறப்பட்டுள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் குரல்கள் எழுந்துள்ளன. அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான சதிமுயற்சி!" என வக்ஃப் திட்டத்தை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் அறிக்கை:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில்,
"இஸ்லாமிய அமைப்புகளும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதும் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக வஃக்ப் திருத்தச் சட்டத்தைப் பாசிச பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை அடிப்படையாகக்கொண்ட மிகவும் அப்பட்டமான ஃபாசிசத் தாக்குதலாகும்.
அரசமைப்புச் சட்டத்துக்கும் தேசிய ஒருமைபாட்டுக்கும் எதிரான வஃக்ப் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் -8 அன்று புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
கடந்து பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கும்பல் கொலைகளின் மூலம் இஸ்லாமியர்களை அச்சுறுத்துவது; அவர்களது வணிக நிறுவனங்களையும் குடியிருக்கும் வீடுகளையும் புல்டோசர்களைக் கொண்டு இடிப்பது; அவர்களுக்குரிய நலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைப்பது; இஸ்லாமிய மாணவர்களின் கல்விக்கான உதவித்தொகையைக் குறைத்து அவர்களை உயர்கல்வி பெற முடியாமல் ஆக்குவது; குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் அவர்களது குடியுரிமையைப் பறிக்க முற்படுவது; அவர்களின் வழிபாட்டிடங்களை இந்துக் கோயில்கள் என உரிமை கோருவது; வழிபாட்டிடங்கள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துசெய்ய முயற்சிப்பது ; பெண்கள் ஹிஜாப் அணியத் தடை போடுவது; மசூதிகளில் தொழுகை செய்பவர்களைத் தாக்குவது; இஸ்லாமியர்கள் பொது வெளிகளில் தமது மத அடையாளத்தை வெளிக்காட்டவே அஞ்சுகிற நிலையை ஏற்படுத்துவது; இப்படி அடுக்கடுக்காக இஸ்லாமியர்கள் மீது ஃபாசிச பாஜக அரசு கொடூரமான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.
அத்தகையத் தாக்குதல்களின் அடுத்த கட்டமாக இஸ்லாமியர்களுக்காக இஸ்லாமியர்கள் மனமுவந்து அளித்த நன்கொடைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்காக இப்போது வக்ஃபு திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
இந்தியா முழுவதும் சுமார் 1.20 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் வஃக்ப் வாரியங்களில் உள்ளன. அந்தச் சொத்துகள் இஸ்லாமிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரால் தானமாக வழங்கிய சொத்துகள் ஆகும்.
அவற்றை நிர்வகிப்பதற்கு 'வஃக்ப் கவுன்சில்' , 'வஃக்ப் வாரியம்' ஆகிய அமைப்புகள் உள்ளன. இதுவரை இருந்த சட்டத்தின்படி அந்த அமைப்புகளை இஸ்லாமியர்களே நிர்வகித்து வந்தனர்.
தற்போது அந்த நிர்வாக அமைப்புகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களைப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உறுப்பினர்களாக நியமித்து அதன் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கு பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மதங்களின் சொத்துகளை அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர். இந்துக் கோயில்களின் சொத்துகளை இந்துக்கள்தான் நிர்வகிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட இந்துக்களை மட்டுமே கொண்ட குழுக்கள் தான் நிர்வகிக்கின்றன.
சீக்கியர்களின் குருத்துவாராக்களை சீக்கியர்களைக் கொண்ட குழு நிர்வாகிக்கிறது; தேவாலயங்களைக் கிறித்தவர்களே நிர்வாகம் செய்கின்றனர்; அப்படியிருக்கும்போது முஸ்லிம்களின் சொத்துகளை மட்டும் முஸ்லிம் அல்லாத மற்றவர்களையும் கொண்டு நிர்வாகம் செய்ய இந்த அரசு முயற்சிப்பது ஏன்?
அவர்களிடம் இருக்கும் சொத்துகளையெல்லாம் பிடுங்கிக் கொண்டு அவர்களைப் பொருளாதார தற்சார்பு அற்றவர்களாக ஆக்கி அடிமைப்படுத்தி இரண்டாம்தர குடிமக்களாக்க வேண்டும் என்பதே பாஜகவின் உள்நோக்கம் ஆகும். பாஜகவின் இந்த ஃபாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.

இந்நிலையில் வெகு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஏப்ரல் -8 அன்று மாவட்டந்தோறும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளோடு அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமாறு அழைக்கிறோம்.
அத்துடன், வஃக்ப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.