Wayanad: வயநாட்டில் டெபாசிட் இழந்த பா.ஜ.க, தோற்றாலும் ஆறுதலில் கம்யூனிஸ்டுகள்! பின்னணி என்ன?
வயநாடு இடைத்தேர்தலில் சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றியை காங்கிரஸ் கூட்டணி வசமாகியிருக்கிறார் பிரியங்கா காந்தி. இவரை எதிர்த்து போட்டியிட்ட கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 2,11,407 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பா.ஜ.க - வின் கேரள மாநில தலைவர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட தற்போது குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழந்திருக்கிறார் அக்கட்சியின் வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ்.
பிரியங்காவை எதிர்த்து போட்டியிட்ட எந்த வேட்பாளரும் நெருங்கவே முடியாத அளவிலான வாக்கு வித்தியாசத்தில் பெற்றிருக்கும் இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டதையே வெற்றியாக பார்க்கிறது ஆளும் கம்யூனிஸ்டு கட்சி.
வயநாடு இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து தெரிவித்த அரசியல் விமர்சகர்கள், " இந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியின் வெற்றி உறுதி என்பது ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். ஆனால், இரண்டாம் இடத்தை பிடிக்கும் கட்சி எது என்பது பெரும் கேள்வியாகவும் எதிர்ப்பாகவும் இருந்தது.
முதல்வர் பினராயி மீதான அதிருப்தி காரணமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படலாம் என கம்யூனிஸ்டு கட்சியிகள் பதற்றத்தில் இருந்தன. இரண்டாவது இடத்தை பிடித்தாலே பெரிய வெற்றியாக கருதியது பா.ஜ.க. அடுத்து வரவிருக்கும் மாநில தேர்தல்களில் இந்த முடிவுகளின் தாக்கம் இருக்கும் என்பதால் தோற்றாலும் இரண்டாம் இடம் என்பது சற்று ஆறுதலான விஷயமாகவே பார்க்கிறது கம்யூனிஸ்டு கட்சிகள் " என்றனர்.