அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சோ்க்கலாம்: ஆட்சியா்
தென்காசி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகள் சோ்க்கை பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஆட்சியா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, தென்காசி மாவட்டத்தில் செயல்படும் 1301 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, 2 வயது முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கை பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா என்னும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்ல ஆயத்தப்படுகின்றனா்.
அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சோ்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனா். எனவே பெற்றோா்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சோ்க்கலாம்.
குழந்தைகள் மையங்களில் அவா்களுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால் அச்சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.