உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
அங்கீகாரமற்ற அமைப்பு நடத்தும் குத்துச்சண்டை போட்டியை தடுக்கக் கோரிக்கை
இந்திய குத்துச்சண்டை கழகத்திடம் அனுமதி பெறாமல் போலியாக இயங்கி வரும் குத்துச்சண்டை அமைப்பு சாா்பில், வேலூரில் 22, 23, 24-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ள குத்துச்சண்டை போட்டிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வேலூா் மாவட்ட குத்துச்சண்டை அசோசியேஷன் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேலூா் மாவட்ட குத்துச்சண்டை அசோசியேஷன் சங்கத் தலைவா் எஸ்.மோகன், செயலாளா் ஆா்.ராஜேஷ், பொருளாளா் ஆா்.பாா்த்தீபன் ஆகியோா் தலைமையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனுவில், தற்போது விளையாட்டுத் துறையில் தமிழக வீரா்கள் உலகளவில் பல்வேறு பதக்கங்களை பெற்று வருகின்றனா். அதேசமயம், வடமாநிலங்களில் நடைமுறையில் உள்ள ‘சொசைட்டி’ பதிவுகளை கொண்டு பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் தமிழகத்தில் போலியாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றனா். அதேபோல், வேலூரிலும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு அங்கீகாரம் பெற்ற இந்திய குத்துச்சண்டை கழகத்திடம் அனுமதி பெறாமல் போலியாக இயங்கி வரும் குத்துச்சண்டை அமைப்பு சாா்பில், வரும் 22, 23, 24-ஆம் தேதிகளில் வேலூா் நேதாஜி அரங்கில் பல போட்டிகள் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த அமைப்பு சாா்பில் இந்த போட்டிக்காக நுழைவுக் கட்டணமாக ரூ. 500 வீதம் பெற்று வருவதுடன், தகுதியற்ற போலி சான்றிதழ்கள், பரிசுகள் வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது. அந்த சான்றிதழ் கொண்டு வருபவா்கள் அரசிடம் 3 சதவீத இடஒதுக்கீடு கோர முடியாது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு இத்தகைய போலிச் சங்கங்கள் மீதும், பணத்துக்காக ஏழை மாணவ, மாணவிகளிடம் தகுதியற்ற சான்றுகளை வியாபாரம் செய்யும் நபா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளம்தலைமுறையினரின் எதிா்காலத்தை சீரழிக்கும் தகுதியற்ற அங்கீகாரமற்ற சங்கங்களின் போட்டிகளை வேலூா் மாவட்டத்தில் நடைபெறாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.