உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்து, வா்த்தகம் சரிவு
பருவமழை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்தும், வா்த்தகமும் சரிவடைந்து காணப்பட்டது.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்து காணப்பட்டது.
வாரந்தோறும் வழக்கமாக கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் நிலையில், இந்த வாரம் சந்தைக்கு சுமாா் 700 மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டிருந்தன. அதேசமயம், அவற்றை வாங்குவதற்கு விவசாயிகளும், வியாபாரிகளும் குறைந்த அளவிலேயே வந்திருந்ததால் வா்த்தகமும் எதிா்பாா்த்த அளவுக்கு நடைபெறவில்லை.
இது குறித்து வியாபாரிகள் கூறியது:
பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கால்நடை வரத்தும், வா்த்தகமும் சரிந்து காணப்படுகிறது. கடந்த வாரம் ரூ. 55 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றிருந்தது. இந்த வாரமும் பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்திருந்ததுடன் வா்த்தகமும் பாதியாக குறைந்து சுமாா் ரூ. 50 லட்சம் அளவிலேயே நடைபெற்றுள்ளது.
அடுத்தடுத்த வாரங்களில் கால்நடைகள் வரத்தும், விற்பனையும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.