அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை
ஒசூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், மாதா்சன பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக கழிவுநீா் கால்வாய் அமைக்காததால், துா்நாற்றம் வீசி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதுகுறித்து சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த மக்கள், அதிகாரிகள் யாரும் இல்லாததால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த சூளகிரி போலீஸாா் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், கிராமத்துக்கு விரைவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.