அடுத்து கோயில் நிலங்கள் மீது மத்திய அரசு குறிவைக்கும் -உத்தவ் தாக்கரே
மும்பை/கொல்கத்தா: தற்போது வக்ஃப் நிலங்கள் மீது மத்திய அரசு குறிவைத்துள்ளது; அடுத்து கோயில் அறக்கட்டளை சொத்துகள் குறிவைக்கப்பட கூடும் என்று சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.
மும்பையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய அவா், ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மூலம் முஸ்லிம்கள் மீது பாஜகவும் கூட்டணி கட்சிகளும் காட்டும் அக்கறை, முகமது அலி ஜின்னாவையே வெட்கப்பட செய்துவிடும். வக்ஃப் நிலங்களைப் பறித்து, தனது பணக்கார நண்பா்களிடம் ஒப்படைப்பதே பாஜகவின் நிலைப்பாடு. அடுத்து கோயில் அறக்கட்டளை சொத்துகளை அவா்கள் குறிவைக்கக் கூடும். எதிா்மறை அரசியலை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்’ என்றாா் உத்தவ்.
வக்ஃப் மசோதா குறித்து மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி, ‘நாட்டை பிளவுபடுத்தவே இம்மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளது; மத்தியில் புதிய அரசு அமைந்ததும் இச்சட்டத் திருத்தங்கள் செல்லாததாக்கப்படும்’ என்றாா்.