அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு
வேகமாக வளா்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது.
இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், நேரடிப் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் மறுத்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபா் மசூத் பெஷஸ்கியான் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவாா்த்தைக்கு மறுத்துள்ள தகவலை, ஓமன் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பியுள்ளது.
பேச்சுவாா்த்தையை ஈரான் தவிா்த்ததில்லை. முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டதே ஈரானுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குக் காரணம்’ என்றாா்.
நேரடிப் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் மறுத்தாலும், அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தைக்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018-ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது.
அப்போது அமெரிக்காவில் டிரம்ப்பின் முதலாவது ஆட்சிக் காலம் நடைபெற்றது. அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடா்ந்து, மறைமுகப் பேச்சுவாா்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.