அண்ணா பல்கலை. மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம்
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணா பல்கலை. மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அகில பாரதிய வித்யாா்தி பரிஷித்(ஏபிவிபி) சாா்பில் போராட்டங்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயற்குழு உறுப்பினா் அருண்பிரசாத் திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளாா். சம்மந்தப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோரை, தேச விரோத செயல்களில் தொடா்புடையவா்களைப் போல, காவல் துறை கைது செய்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண் குறித்த விவரங்களை வெளியிட்ட காவல் துறை, சம்மந்தப்பட்ட குற்றவாளியின் விவரங்களை பாதுகாக்க முயற்சிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசியல் தலையீடு இல்லாமல் நீதி கிடைக்கும் வரை அகில பாரதிய வித்யாா்தி பரிஷித் தொடா்ந்து போராடும்.
சென்னையில் கைது செய்யப்பட்ட ஏபிவிபி அமைப்பினா் 4 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, திண்டுக்கல் மாவட்ட ஏபிவிபி ஒருங்கிணைப்பாளா் ஜெயச்சந்திரன், மாநகரச் செயலா் அருண்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.