அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி: 6 போ் மீது வழக்கு
அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.36 லட்சம் மோசடி செய்த 6 போ் மீது திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவருக்கு வத்தலகுண்டு பணிமனையில் அரசுப் பேருந்து நடத்துனராக பணிபுரியும் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவின் அறிமுகம் கிடைத்தது.
அப்போது, ராஜேந்திரன் தனது மகன்கள் இருவருக்கும், தம்பி மகன் ஒருவருக்கும் அரசுப் பணி வேண்டும் என மாரிமுத்துவிடம் தெரிவித்தாா். பணம் கொடுத்தால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தலைமைச் செயலக அதிகாரிகள் மூலம் பொதுப் பணித் துறையில் பணி வாய்ப்புப் பெற்றுவிடலாம் என மாரிமுத்து தெரிவித்தாா்.
இதை நம்பிய ராஜேந்திரனிடம், கரூரைச் சோ்ந்த குமாா் என்பவரை மாரிமுத்து அறிமுகப்படுத்தினாா். ரூ.36 லட்சம் கொடுத்தால், 6 மாதத்தில் பணி வாய்ப்பு பெற்றுவிடலாம் என குமாா் உறுதி அளித்தாா். இதை நம்பிய ராஜேந்திரன் இரு தவணைகளில் ரூ.36 லட்சத்தை கொடுத்தாா்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சில நாள்களில் மாரிமுத்து, குமாா் இருவரும் தலைமறைவாகவிட்டனா். ஏமாற்றமடைந்த ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் மாரிமுத்து, குமாா், அவரது மனைவி பூமகள், உறவினா்கள் சுசித்ரா, யோகேஸ்வரன் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.