மதுரை மடீட்சியா அரங்கில் இன்று முன்னாள் படை வீரா்கள் குறைதீா் முகாம்
அதானி குழும ஒப்பந்தங்கள்: கென்யா அரசு ரத்து
அதானி குழுமத்துடனான விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அதிபா் வியாழக்கிழமை அறிவித்தாா்.
சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,238 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கென்யா அதிபா் வில்லியம் ரூடோ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘எங்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய புதிய தகவல்களின் அடிப்படையில் அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்களை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் வணிக மையமான கென்யாவின் தலைநகா் நைரோபியில் உள்ள முக்கிய விமான நிலையத்தை கூடுதல் ஓடுபாதை மற்றும் முனையத்துடன் நவீனமயமாக்கும் ஒப்பந்தத்தில் அந்நாட்டு அரசுடன் அதானி குழுமம் ஈடுபட்டிருந்தது. பரவலாக விமா்சிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் காரணமாக கென்யாவில் அதானி குழுமத்துக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதையொட்டி, விமான நிலைய ஊழியா்களின் வேலைநிறுத்தமும் நடைபெற்றது.
இதேபோன்று, கென்யாவில் மின்பரிமாற்ற பாதைகளை அமைப்பதற்கான ஒப்பந்தமும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்நாட்டின் எரிசக்தி அமைச்சா் ஓபியோ வாண்டாய், ‘இந்த ஒப்பந்தம் இறுதியானதில் கென்யாவின் தரப்பில் லஞ்சம் அல்லது ஊழல் எதுவும் நடைபெறவில்லை’ என்று நாடாளுமன்றக் குழுவிடம் உறுதியளித்தாா்.