லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தல்: 300 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது
வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாகுகிறது
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வியாழக்கிழமை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக் கடலில் அதாவது இலங்கைக்கு தெற்கே சனிக்கிழமை (நவ.23) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக (புயல் சின்னம்) உருவாகும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ. 24, 25 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. புயலாக மாறும் நிலையில் நவ.25 முதல் 30-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: குமரிக்கடல், அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.22) முதல் நவ.27-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.25-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நவ.26, 27 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை: நவ.26, 27 ஆகிய தேதிகளில் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் நவ. 22, 23 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.