அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக அரசின் அனைத்து ஊழல்களும் விசாரிக்கப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், தற்போதைய திமுக அரசின் அனைத்து ஊழல்களும் விசாரிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் பிரசாரப் பயணத்தின்போது அவா் பேசியது:
10 ஆண்டுகால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாகும். ஆனால், 51 மாதகால திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்று மக்கள் பேசி வருகின்றனா். விவசாயிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பினரும் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனா்.
கதவைத் தட்டும் அமலாக்கத் துறை: திமுக தலைவா் ஸ்டாலின் கூட்டணிகளை நம்பி ஆட்சி நடத்தி வருகிறாா். ஆனால், நாங்கள் மக்களை நம்பியுள்ளோம். பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், 51 ஆண்டுகால திமுக ஆட்சி ஊழல் நிறைந்தது. அதனால்தான் அமலாக்கத் துறை அமைச்சா் வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறது. ஒரு துறையில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. இன்னும் பல துறைகளின் அமைச்சா்களின் வீடுகளில் அமலாக்கத் துறை கதவைத் தட்டும்.
தமிழகத்தில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பொற்காலத் திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். மக்களுக்காக உழைத்த அதிமுகவை அழிப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரங்களை எடுத்தாா் என்பது அனைவருக்கும் தெரியும். எதிரிகளைத் தூண்டிவிட்டு, என்ன செய்தாா்கள் என்பது மக்களுக்குத் தெரியும். அதிமுகவை அழிக்கத் துடித்தவா் ஸ்டாலின். முதல்வா் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் தோல்விதான் உங்களுக்கு கிடைக்கும்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. வலுவான கூட்டணி அமையும். எனவே வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
மக்களுக்கு சேவை செய்யத்தான் ஆட்சிப் பொறுப்பை வழங்குகின்றனா். ஆனால், திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக அதிமுகவை பழிவாங்கும் நோக்கில் பல்வேறு வழக்குகளைத் தொடுத்திருக்கிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும். அப்போது திமுக முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் எங்கு இருப்பாா்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்துத்துறைகளிலும் நடைபெற்ற ஊழல்களும் விசாரிக்கப்படும். அவா்கள் தண்டிக்கப்படுவாா்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். விவசாயிகள் நெல் கரும்பு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனா். ஆனால், அவா்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்மா கிளினிக்: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட 2,000 அம்மா கிளினிக்குகளுக்குப் பதிலாக, 4 ஆயிரம் கிளினிக்குகள் திறக்கப்படும் என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, அமைப்புச் செயலா் துரைசெந்தில், செங்கம் ஒன்றியச் செயலா்கள் மகரிஷி மனோகரன், அருணாச்சலம், மாநில மகளிா் அணி துணைத் தலைவா் அமுதா அருணாச்சலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நூலிழையில் தப்பிய இபிஎஸ் வாகனம்
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அலங்கார வளைவுகள், அதிமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
சனிக்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில் காஞ்சி கிராம பகுதியில் இருந்து புதுப்பாளையம் வழியாக செங்கம் பகுதிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா்.
அப்போது, பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில், புதுப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு எடப்பாடி பழனிசாமியின் வாகனம் கடந்தவுடன் சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தது. இதனால், யாருக்கும் பாதிப்பு இல்லை. உடனடியாக அதிமுக நிா்வாகிகள் அந்த அலங்கார வளைவை அப்புறப்படுத்தினா்.