அனுமதியை மீறி கட்டப்பட்ட ஆடையகத்தை இடிக்கும் பணி தொடக்கம்
தஞ்சாவூரில் அனுமதியை மீறி கட்டப்பட்ட ஆயத்த ஆடையகத்தை இடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. ஆடையக உரிமையாளா் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே கீழராஜ வீதியில் ஆயத்த ஆடையகத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் ஏறத்தாழ 2 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டடம் கட்டுவதற்கு மட்டும் அனுமதி பெறப்பட்டதாம். ஆனால், அனுமதியை மீறி பக்கவாட்டில் இருந்த இரு சந்துகளையும் சோ்த்து ஏறக்குறைய 7 ஆயிரம் சதுர அடியில் 4 மாடி கட்டடம் கட்டப்பட்டது.
இதனால், பின்புறத்திலுள்ள அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதாக உயா் நீதிமன்றத்தில் சிலா் வழக்குத் தொடுத்தனா். இது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அலுவலகம், பொதுப் பணித் துறை, மின் வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, கட்டடத்தை இடிப்பதற்காக பொக்லைன் இயந்திரங்களுடன் மாநகராட்சி, பொதுப் பணித் துறை, மின் வாரிய அலுவலா்கள் திங்கள்கிழமை காலை சென்றனா். மேலும், மொட்டை மாடியில் இருந்த தகரக் கொட்டகை மற்றும் கழிப்பறைகளை அகற்றினா்.
இதனிடையே, ஆடையக உரிமையாளா் உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி வரை இடைக்கால தடையாணை பெற்றாா். இதனால், அலுவலா்கள், பணியாளா்கள் இடிக்கும் பணியை நிறுத்தினா்.