அமெரிக்க அதிபரின் கருத்தை பிரதமா் தெளிவுபடுத்த வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பான அமெரிக்க அதிபரின் கருத்து குறித்து பிரதமா் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருதரப்பினரையும் வியாழக்கிழமை சந்தித்த பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்த விவகாரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் கூறியது உண்மையா, பொய்யா என்பதை பிரதமரும், பாதுகாப்பு துறை அமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும். இந்தத் தாக்குதல் விவகாரத்தில்
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. இருப்பினும் இதை முழுமையாக ஆதரிப்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை வரவேற்கத்தக்கது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பது அவா்களது கட்சியின் நிலைப்பாடு என்றாா் அவா்.
அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராம. சுப்புராம், டி.புஸ்பராஜ், முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ். மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதேபோல, வடகாடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருதரப்பினரையும் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னத்துரை சந்தித்து பேசினாா்.