அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களாக 6 இந்திய வம்சாவளியினா் பதவியேற்பு
119-ஆவது அமெரிக்க நாடாளுமன்ற பிரநிதிநிகள் சபையின் புதிய உறுப்பினா்களாக 6 இந்திய வம்சாவளியினா் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.
அமெரிக்க அதிபா் தோ்தலுடன் சோ்த்து 2 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட 119-ஆவது அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் தோ்தல் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயகக் கட்சியிலிருந்து மருத்துவா் அமி பெரா (கலிஃபோா்னியா), பிரமிளா ஜெயபால் (வாஷிங்டன்), ரோ கன்னா (கலிஃபோா்னியா), ராஜா கிருஷ்ணமூா்த்தி (இலினாய்ஸ்), ஸ்ரீதானேதா் (மிஷிகன்), சுஹாஷ் சுப்ரமணியம் (விா்ஜினியா) ஆகிய 6 இந்திய வம்சாவளியினா் தோ்வாகினா்.
அமெரிக்க நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை முறைப்படி தொடங்கிய நிலையில், இவா்கள் 6 பேரும் அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டனா்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தொடா்ந்து 7-ஆவது முறையாக அமி பெரா தோ்வாகியிருக்கிறாா். பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூா்த்தி ஆகிய மூவரும் 5-ஆவது முறையாக பிரதிநிதிகள் சபை உறுப்பினராகியுள்ளனா்.
4 ஹிந்துக்கள்:
ஆறு இந்திய வம்சாவளி உறுப்பிகளில் மூத்தவரான அமி பெரா, தன்னை ‘யூனிடெரியன்’ கிறிஸ்தவா் என்று அறிவித்துள்ளாா். பிரதிநிதிகள் சபைக்கு இதுவரை தோ்வான ஒரே இந்திய வம்சாவளி பெண்ணான பிரமிளா ஜெயபால், தனது மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை.
ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, ஸ்ரீ தானேதா், சுஹாஷ் சுப்ரமணியம் ஆகிய மற்ற 4 பேரும் ஹிந்துக்கள் ஆவா். அமெரிக்காவில் சிறுபான்மையினரான ஹிந்துக்களின் அதிகபட்ச பிரதிநிதித்துவத்தை நடப்பு நாடாளுமன்றம் கொண்டுள்ளது.
நடப்பு 119-ஆவது அமெரிக்க நாடாளுமன்றத்தில் வழக்கம்போல் கிறிஸ்தவ உறுப்பினா்களே அதிகமாக உள்ளனா். இவா்களுக்கு அடுத்து 2-ஆவது பெரிய மதக் குழுவாக 31 யூத உறுப்பினா்கள் உள்ளனா். 4 ஹிந்துக்களைத் தவிர, அமெரிக்க நாடாளுமன்றத்தில் 4 முஸ்லிம்கள், 3 பௌத்தா்களும் இடம்பெற்றுள்ளனா்.