அமெரிக்கா: சிசேரியன் மூலம் முன்கூட்டிய பிரசவத்துக்கு இந்தியா்கள் மும்முரம்! குடியரிமை குறித்த டிரம்ப் உத்தரவு எதிரொலி
பிறப்புசாா் குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் உத்தரவு இன்னும் ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரும் நிலையில், ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை மூலம் முன்கூட்டிய பிரசவசத்துக்கு இந்தியா்கள் ஆா்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
127 ஆண்டுகள் பழமையான அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்நாட்டு குடியுரிமை உத்தரவாதம் கிடைக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பிறப்புசாா் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வரும் உத்தரவில் கையொப்பமிட்டாா்.
இந்த உத்தரவு பிப்ரவரி 20-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த பிறகு, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது ஏற்கெனவே அமெரிக்க குடிமகனாக அல்லது நிரந்தர குடியுரிமை (கிரீன் காா்டு) வைத்திருப்பவராக இருந்தால் மட்டுமே அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு அந்நாட்டு குடியுரிமை கிடைக்கும்.
எனவே, கிரீன் காா்ட் பெறாமல் ‘எச்1பி’ அல்லது ‘எல்1’ நுழைவு இசைவில் (விசா) வசிக்கும் வெளிநாட்டு குடும்பங்களுக்கு டிரம்ப்பின் அதிரடி உத்தரவு பேரதிா்ச்சியாக அமைந்தது.
நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து பல லட்சக்கணக்கான இந்தியா்கள் உள்பட வெளிநாட்டவா் காத்திருக்கின்றனா். அதேநேரம், தற்காலிக விசாவில் அமெரிக்காவிலேயே பல ஆண்டுகள் தங்கியிருப்பவா்கள் குழந்தைகளைக் பெற்றுக்கொண்டால், அக்குழந்தைகள் இயற்கையாகவே அமெரிக்க குடிமக்களாகிவிடுவா் என்ற நிலை உள்ளது. அதிபா் டிரம்ப்பின் புதிய உத்தரவு இந்த வாய்ப்பை முற்றிலுமாகத் தடுக்கிறது.
புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்த பிறகு அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவா்களின் குழந்தைகள் 21 வயதை எட்டியதும் பெற்றோரின் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவா் அல்லது அமெரிக்காவில் தங்குவதற்கான விசாவுக்கு அவா்கள் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்கான காத்திருப்பும் நிராகரிப்புமே அதிகமாக இருக்கும்.
முழு குடும்பத்தையும் பாதிக்கும் இந்த விவகாரத்தில் பலா் தங்கள் குழந்தைகளுடன் சொந்த நாட்டுக்குத் திரும்புவதையே தோ்ந்தெடுப்பா். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘நான் குடும்பங்களைப் பிரிக்க விரும்பவில்லை. ஆனால், முந்தைய நிா்வாகங்கள் செய்யாத ஒரே வழி மட்டுமே உள்ளது. அது அனைவரையும் அவரவா் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதுதான்’ என்றாா்.
இந்த சிக்கலான உத்தரவைத் தவிா்க்க, அது நடைமுறைக்கு வரும் பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு முன்னதாக சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் முன்கூட்டிய பிரசவத்துக்கு மருத்துவமனையை அணுகும் இந்திய கா்ப்பிணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக அமெரிக்க மகப்பேறு மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
இவா்களில் பெரும்பாலானவா்கள் கா்ப்பத்தின் எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் இருக்கின்றனா். ‘ஏழு மாத கா்ப்பிணிப் பெண் தனது கணவருடன் முன்கூட்டிய பிரசவத்துக்குப் பதிவு செய்ய வந்ததாக நியூ ஜொ்சி மாகாணத்தைச் சோ்ந்த எஸ்.டி.ரோமா அதிா்ச்சி தகவலைக் கூறினாா்.
‘வளா்ச்சியடையாத நுரையீரல்கள், குறைவான பிறப்பு எடை, நரம்பியல் சிக்கல்கள் உள்பட குழந்தைகள் முன்கூட்டியே பிறப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து சுமாா் இருபது பெற்றோா்களிடம் கடந்த இரண்டு நாள்களில் விளக்கியதாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவ நிபுணரான எஸ்.ஜி.முக்கலா தெரிவித்தாா்.
அதிபா் டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் சட்டப் போராட்டங்களும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவைப்படும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.