தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
அம்சியில் தேன் இருப்பு கொள்கலன்கள் நிறுவப்படும்: அமைச்சா் க. பொன்முடி
கன்னியாகுமரி மாவட்டம், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகில் தேன் இருப்பு கொள்கலன்கள் ரூ. 40 லட்சம் செலவில் நிறுவப்படும் என்று வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.
கதா் மற்றும் கிராமத் தொழில்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:
கன்னியாகுமரி மாவட்டம், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகு ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட தேனீ விவசாயிகள் தேனீ வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேன் இருப்பு வைக்க போதுமான இடவசதி தேவைப்படுகிறது. அதனால், இந்த அலகில் செயல்பட்டு வரும் கட்டடத்துக்கான புதுப்பித்தல் அவசியமாகிறது. மேலும், இவ்வலகில் கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேனை அதிகளவில் இருப்பு வைக்க ஏதுவாக கொள்கலன்கள் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் ரூ. 40 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
மூன்று தளங்கள் கொண்ட சேலம் அண்ணா பட்டு மாளிகை வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களின் வசதிக்காக ரூ. 20 லட்சம் செலவில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சேலம் மாவட்டம், குகையில் செயல்பட்டு வரும் காலணி அலகில் உள்ள கட்டடம், தொழிலாளா்கள் பணி செய்ய ஏதுவாக காலணி பொலிவூட்டும் கூடம், ஆழ்துளை கிணறு உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் வசிக்கும் இருளா் மற்றும் குரும்பா் பழங்குடியின தேனீ விவசாயிகள் 100 பேருக்கு தேனீ வளா்ப்புப் பெட்டிகள் மற்றும் குழுக்களுக்கு தேன் சேகரிக்கத் தேவையான உபகரணங்கள் ரூ. 4 லட்சம் செலவில் வழங்கப்படும் என்றாா் அவா்.