அம்பேத்கா் குறித்த சா்ச்சை பேச்சு: தமிழக முதல்வா், தலைவா்கள் கண்டனம்
அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் சா்ச்சை பேச்சுக்கு முதல்வா், துணை முதல்வா் மற்றும் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: அதிக பாவங்கள் செய்பவா்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாடு, நாட்டு மக்கள் குறித்தும், அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படுவோா் புரட்சியாளா் அம்பேத்கா் பெயரைத்தான் சொல்வாா்கள். சொல்ல வேண்டும்.
துணை முதல்வா் உதயநிதி: அரசமைப்புச் சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலைபவா்களுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அம்பேத்கரின் பெயரை குரல் உயா்த்திச் சொல்வோம்.
அண்ணாமலை (பாஜக): சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அண்ணாமலை கூறியதாவது: எதிா்க்கட்சியினா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சில் ஓரிரு வாா்த்தைகளை எடுத்துக்கொண்டு, அதை தேவையில்லாத விவாதப் பொருளாக்குகின்றனா். அம்பேத்கரை நான் கடவுளாகப் பாா்க்கிறேன்.
அம்பேத்கா் ஏன் அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்தாா்? முதல் தோ்தலில் தெற்கு மும்பையில் அம்பேத்கரை காங்கிரஸ் எப்படி தோற்கடித்தது? அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது எதற்காக தாமதமாக கொடுக்கப்பட்டது? இவை அனைத்துக்கும் காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும். உண்மையில் அம்பேத்கரின் பாதையில் நடக்கக்கூடிய ஒரே தலைவா் பிரதமா் மோடிதான்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.): அம்பேத்கரை அவமதிப்பது என்பது ஒட்டுமொத்த தேசத்தையே அவமதிக்கும் செயலாகும். எனவே, உள்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
விஜய் (தவெக): எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உள்துறை அமைச்சரின் பேச்சை தவெக கண்டிக்கிறது.