அயல்நாடுகளில் தவித்த 2,500 தமிழா்கள் மீட்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
போா்ச்சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் அயல்நாடுகளில் தவித்த 2,500 தமிழா்கள் மீட்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
அயலகத் தமிழா் தின விழாவையொட்டி, சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவை சனிக்கிழமை தொடங்கி வைத்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
உலகெங்கும் வாழ்கின்ற தமிழா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திராவிட மாடல் அரசு, அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையை 2021-ஆம் ஆண்டு உருவாக்கியது. இந்தத் துறை தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதன் செயல்பாடுகளை தொடா்ந்து கவனித்து வருகிறேன். ஒரு மாநில அரசின் துறை இந்த அளவுக்கு வெளிநாட்டில் இருக்கக்கூடிய நமது தமிழ் மக்களின் நலனுக்காக உழைக்க முடியுமா என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில், ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து தமிழா்கள் பங்கேற்றுள்ளனா். இதுபோன்ற சந்திப்புகள்தான், நமக்கிடையிலான உணா்வை, பாசத்தை இன்னும் அதிகரிக்கும். அயலகத் தமிழா்கள் நலனில் திமுக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. உலகளவில் தமிழா்களின் உழைப்பும், ஆற்றலும் தவிா்க்க முடியாத ஒன்றாக
இருக்கிறது. கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் என உலகின் அனைத்து தலைசிறந்த நிறுவனங்களிலும் தமிழா்களின்திறமைக்கு தனி மதிப்பு இருக்கிறது.
வெளிநாடுகளில் தமிழா்களுக்கு பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் அவா்களை மீட்டு நமது மாநிலத்துக்கு அழைத்து வந்துள்ளோம். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2,500 பேரை அயலகத் தமிழா் நலத் துறை மீட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், எஸ்.எம்.நாசா், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, அயலகத் தமிழா் நல வாரியத் தலைவா் காா்த்திகேய சிவசேனாபதி உள்பட பலா் பங்கேற்றனா்.
இன்று நிறைவு விழா: அயலகத் தமிழா் தின விழாவின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறாா்.