அரக்கோணம் அருகே விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்: முதல்வா் அறிவிப்பு
அரக்கோணம் அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த பைக் விபத்தில் அதில் பயணித்த காவலா் எல்.செந்தில்வேல் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
காஞ்சிபுரத்தை அடுத்த புள்ளம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் எல்.செந்தில்வேல் (34). சென்னை தலைமை செயலகத்தில் உள்வட்ட பாதுகாப்பு வாகனப் பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தாா். தினமும் வீட்டில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்து அங்கிருந்து ரயிலில் சென்னைக்கு செல்வது வழக்கம்.
சனிக்கிழமை அதிகாலை பணிக்குச் செல்வதற்காக தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் அரக்கோணம் நோக்கி வந்த செந்தில்வேலின் வாகனம் மீது ஆட்டுப்பாக்கம் ரயில்நிலையம் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்வேல், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இறந்த செந்தில்வேலுக்கு மனைவி புஷ்மிதா, இரு குழந்தைகள் உள்ளனா்.
முதல்வா் ரூ. 25 லட்சம் நிவாரணம்: இந்தச் சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உள்வட்ட பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஹவில்தாா் எல்.செந்தில்வேல் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளாா்.