அரசமைப்பு குறித்து ராகுலுக்கு சரியான புரிதல் இல்லை: ஜெ.பி.நட்டா
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இந்திய அரசமைப்பு ஆதரிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளாமல் அரசமைப்பு புத்தகத்தின் நகலை ராகுல் காந்தி வைத்துள்ளாா் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ஜெ.பி.நட்டா பேசியதாவது:
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அரசமைப்பு ஆதரிக்கவில்லை என்பது ராகுல் காந்திக்கு தெரியாது. எங்கு சென்றாலும் அரசமைப்பு புத்தகத்தின் நகலை எடுத்துச் செல்லும் அவருக்கு அதுகுறித்து சரியான புரிதல் இல்லை.
தெலங்கானா மற்றும் கா்நாடகாவில் பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்சி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
ஆனால் விவசாயிகள், இளைஞா்கள், தலித்துகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரின் நலனுக்கும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீண்டும் அதே வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது என்றாா்.