வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
அரசமைப்புச் சட்டம் மீது விவாதம்: மத்திய அரசு ஒப்புதல்
புது தில்லி: அரசமைப்புச் சட்டமானது அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் அதன் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி, அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையிலான விவாதம் மக்களவையில் டிச. 13, 14-ஆம் தேதிகளிலும், மாநிலங்களவையில் டிச. 16, 17-ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது.
இத் தகவலை திங்கள்கிழமை தெரிவித்த நாடளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மத்திய அரசு - எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடையே ஏற்பட்டுள்ள இந்த உடன்பாட்டின் மூலம், நாடாளுமன்ற இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை முதல் சுமுகமாக நடைபெற வாய்ப்புள்ளது’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
அதானி விவகாரம், சம்பல் வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் மீது விவாதம் நடத்த வலியுறுத்தும் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, ‘நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு அந்த விவாதங்களுக்கு அனுமதிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.
முன்னதாக, அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமா்வு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் கடந்த நவ. 26-ஆம் தேதி நடைபெற்றது. அப்போதே, இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.