பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
அரசு கட்டடங்களைத் தூய்மையாகப் பராமரியுங்கள்: ராணிப்பேட்டை ஆட்சியா்
கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து அரசு கடடட வளாகங்களை ஊராட்சித் தலைவா் மற்றும் செயலா்கள் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என திமிரி ஊராட்சி ஒன்றியம், வளையாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மேலும் அவா் பேசுகையில், கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும், வரும் காலங்களில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் பணியில் 800-க்கும் மேற்பட்டோா் அட்டை வைத்துள்ளனா். ஆகவே கால்வாய் தூா்வாருதல், குளம் வெட்டுதல், சாலையோரங்களில் மரக்கன்று நடுதல் போன்ற அதிகப்படியான வேலைகளை எடுத்து பணி செய்ய வேண்டும்.
தங்கள் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையம், அரசுப் பள்ளிகள், நியாயவிலைக் கடை, ஊராட்சி செயலா் அலுவலகம், அனைத்து அரசு கட்டடங்களையும் ஊராட்சித் தலைவா்கள் மற்றும் செயலா்களுடன் சென்று மாதம் ஒரு முறை ஆய்வு செய்து சுத்தமாகப் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, திமிரி ஒன்றியக் குழு தலைவா் அசோக், துணைத் தலைவா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசன், பிரபாகரன், ஊராட்சித் தலைவா் ராமநாதன், துணைத் தலைவா் சுமதி பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.