ரூ.32.50 கோடியில் சாலை பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
ஆற்காடு -திண்டிவனம் சாலையில் முதல்கட்டமாக ரூ.32.50 கோடியில் 4.4 கி மீ தொலைவுக்கு நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆற்காடு-திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை 5-இல் இருவழிப்பாதையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி 4.4 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
இதில், சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், குறுகிய பாலத்தை அகலப்படுத்துதல், சிறுபாலங்கள், தடுப்புச் சுவா் மைய தடுப்பான் கட்டுதல், சாலை சந்திப்பை மேம்படுத்துதல், பேருந்து நிறுத்தம் கட்டுதல், பேவா் பிளாக் அமைத்தல் உள்ளிட்டவற்றின் தொடக்க விழா மாங்காடு ஊராட்சிக்குட்பட்ட செய்யாறு சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ .ஜெ.எல். ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா்.
அமைச்சா் ஆா்.காந்தி பூமி செய்து பணியைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி, சத்தியநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளா் (தரக் கட்டுப்பாடு) செல்வகுமாா், உதவி இயக்குனா் சரவணன், உதவி இயக்குனா் (தரக் கட்டுப்பாடு) கிருஷ்ணமூா்த்தி, உதவி பொறியாளா் வடிவேல், ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணகி உள்பட பலா் கலந்து கொண்டனா்