3ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.2.1 லட்சம் கட்டணமா?
பெங்களூருவில் தனியார் பள்ளி மாணவருக்கு கட்டணமாக ரூ. 2.1 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கொடுத்த ரசீது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகள் வணிகமயமாக்கப்பட்டுள்ளதாகவும், பொறியியல் கல்லூரிகளின் கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் அரசு பள்ளிக் கட்டணத்தையும் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என பெற்றோர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
கல்வி முறை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவிவரும் நிலையில், தற்போது கல்வி நிலையங்களுக்கான கட்டணமும் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 3ஆம் வகுப்பு மாணவருக்கு கல்விக் கட்டணமாக ரூ. 2.1 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கட்டண ரசீதை பெற்றோர் கூட்டமைப்புக்கான குரல் என்ற அமைப்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், கல்விக் கட்டணம் ரூ.1,90,000 என்றும், ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் ரூ. 9,000 எனவும், முன்பணமாக ரூ. 11,449 கட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ரசீதை பகிர்ந்துள்ள பெற்றோர் கூட்டமைப்பு, பெங்களூருவில் 3ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ. 2.1 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. எந்த அளவு பணவீக்கமும் இதை நியாயப்படுத்த முடியாது. பொறியியல் படிப்புக்கான கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் அரசு பள்ளிக் கல்வி கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்த அஞ்சுகிறது. தனியார் பள்ளிகளைப் போன்ற சிறந்த வணிகம் வேறு எதுவுமில்லை எனப் பதிவிட்டுள்ளது.