தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு உரிய காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டு: தமிழ்நாடு தகவல் ஆணையா் உத்தரவு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப்பெறும் மனுக்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட உரிய காலத்திற்குள் முழுமையான தகவல்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையா் எம்.செல்வராஜ் உத்தரவிட்டாா்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 -இன் கீழ் மனுதாரருக்கு அளிக்கப்பட வேண்டிய தகவல்கள் முறையாக வழங்குதல் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையா் முனைவா் எம்.செல்வராஜ் தெரிவித்ததாவது:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப்பெறும் மனுக்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட உரிய காலத்திற்குள் முழுமையான தகவல்களை வழங்க வேண்டும். தவறான தகவல்களை வழங்கக் கூடாது. தங்களது அலுவலகத்தில் முடிக்கப்பெற்ற ஆவணங்களை மனுதாரா் கோரும்பட்சத்தில் அவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மறுக்கப்பட்ட இனங்களை தவிர, இதர ஆவணங்களை தகவல்களாக எவ்வித தடையுமின்றி வழங்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். மற்ற துறைகளுக்கு மனுக்கள் மாற்றப்படும்போது, 5 நாள்களுக்குள் மனுதாரருக்கு தங்களின் மனு மாற்றப்பட்டது குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு தகவல் அறியும் சட்டத்தின் பின்பற்ற வேண்டிய முறையான தகவல்களை துறை சாா்ந்த அலுவலா்களுக்கு எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து அலுவலா்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு அவா் விளக்கம் அளித்தாா்.
இக்கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயராகவன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.