அரசு பணியாளா்கள் சங்கத்தினா் மறியல் போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் முருகேசன் தலைமை வகித்து பேசினாா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்குதல், பட்டு வளா்ச்சித் துறை, டாஸ்மாக், சத்துணவு, அங்கன்வாடி, சாலைப் பணியாளா்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண வேண்டும். வெளிப்படையான நியமனம், இடமாறுதல், பதவி உயா்வு வழங்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
தொடா்ந்து, மறியலில் ஈடுபட முயன்ற அவா்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் கைது செய்தனா்.