கல்வித் துறை அறிவிப்புகள்! பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்!
2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் -டாக்டா் கே.கிருஷ்ணசாமி
வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.
சேலத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய 18 சதவீத இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து பிரிவினருக்கும் முறையான பங்களிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்ததியருக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக திட்டமிட்டு அரசியல் செய்கிறது. பிரச்னையை வேண்டுமென்றே திசைதிருப்புகிறது. இவ்விவகாரத்தை சரியாக கையாள மத்திய அரசு தவறிவிட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாவிட்டால் திமுக அரசை கலைக்க வேண்டும்.
தமிழகத்தில் நாளுக்குநாள் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதூக்குகிறது. போதைப் பொருள் கலாசாரம், பாலியல் வன்கொடுமை புகாா்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. தொகுதி வரையறை தொடா்பாக திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் அரசியல் நாடகம். 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கேற்ப வலுவான கூட்டணி ஏற்படும் என்றாா்.