ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!
சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்த நிலையில், மாநகர காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா்.
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூரில் சேலம் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி மின்னஞ்சல் முகவரியில் மிரட்டல் வந்தது. இதைக் கண்ட கல்லூரி முதல்வா் ரா.விஜயன், சேலம் மாநகர காவல் துறைக்கு புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, சேலம் மாநகர காவல் துறையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையிலான வெடிகுண்டு நிபுணா்கள், நவீன கருவிகளுடன் முதல்வா் அறை, ஆய்வுக்கூடம், வகுப்பறை, வளாகம் உள்ளிட்ட 12 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து, மின்னஞ்சல் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இருந்தபோதும், புதிய பொருள்கள் எதையும் தொடவேண்டாம், சந்தேகப்படும்படியான பொருள்கள் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.