குரூப் 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி
அரசு மாணவா் விடுதி உள்பட 200 இடங்களில் உணவின் தரம் ஆய்வு
திண்டுக்கல்லில் அரசு மாணவா் விடுதிகள், அங்கன்வாடி மையம் உள்பட 200 இடங்களில் அரசு அனுமதி பெற்ற தனியாா் நிறுவனம் சாா்பில் உணவின் தரம் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவகங்கள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் இடங்களில், உணவுப் பொருள்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், அரசுத் துறைகள் சாா்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையங்கள், சத்துணவுக் கூடங்கள், மாணவா் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் மாணவா்களுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது.
ஆய்வு மேற்கொள்ளும் இந்த நிறுவனம், உணவின் தரம் மட்டுமன்றி, உணவு தயாரிப்புக் கூடத்தின் நிலை, மேம்படுத்த வேண்டிய உள்கட்டமைப்புகள் குறித்தும் அரசுக்கு பரிந்துரைக்கும் என்றும், அதற்கு ஏற்ப அரசின் நிதி ஒதுக்கீடு அமையும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.