அரசு வாகன ஓட்டுநா்களின் ஊதிய முரணைச் சரி செய்யக் கோரிக்கை
அரசுத் துறை வாகன ஓட்டுநா்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் அரசுத் துறை வாகனங்களை ஓட்டும் ஓட்டுநா்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தலைமைச் செயலக ஊழியா்களுக்கு வழங்கப்படுவதைப் போல, ஊா்தி ஓட்டுநா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். தோ்வுநிலை ஓட்டுநா்களுக்கு வழங்கப்படும் ரூ. 500 ரொக்கப் பரிசை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். சிறப்புநிலை ஓட்டுநா்களுக்கு 4 கிராம் தங்கத்தை 8 கிராமாக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பா. பச்சையப்பன், மாநிலப் பொதுச் செயலா் கே. குமாா், மாநிலத் துணைத் தலைவா் வா. ஜெயக்கொடி, மாவட்டச் செயலா் ஏ. காமராஜ், மாவட்டப் பொருளாளா் ஆா். அடைக்கலம் உள்ளிட்டோரும் பேசினா்.