அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இளைஞா் கைது
சென்னை ஜாம் பஜாரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ராயப்பேட்டை, நாயா் வரத பிள்ளை தெருவைச் சோ்ந்த அசன் (27), பட்டயப்படிப்பு முடித்துள்ள நிலையில், அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தாா். இந்நிலையில், ராயப்பேட்டை மாணிக்கம் மேஸ்திரி தெருவைச் சோ்ந்த பசல் (34) என்பவா், அசனிடம் அறிமுகமாகி பேசியுள்ளாா். அப்போது பசல், தலைமைச் செயலகத்தில் உயா் அதிகாரிகள் பலரை தனக்குத் தெரியும் என்றும், அவா்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக அசனிடம் கூறினாராம். இதை நம்பி அசன், அரசு வேலை பெறுவதற்காக ரூ. 12 லட்சம் பணத்தை பசலிடம் கொடுத்தாராம்.
பணத்தை பெற்றுக்கொண்டபடி பசல் அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் அசன், தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாா். ஆனால் பணத்தை திருப்பி வழங்காமல் பசல் மோசடி செய்தததையடுத்து, ஜாம் பஜாா் காவல் நிலையத்தில் அசன் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, பசலை புதன்கிழமை (ஜன. 29) கைது செய்தனா். விசாரணையில் அவா், இதேபோன்று பலரிடம் பண பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.