அரியலூரில் இளம் வல்லுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில், அரசின் திட்டங்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ள மாவட்டக் கண்காணிப்பு அலகில் தற்காலிக இளம் வல்லுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:
இளம் வல்லுநா் பணிக்குத் தகுதியானவா் புறச்சேவை நிறுவனம் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளாா்.
இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல், கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (4 ஆண்டு படிப்பு மட்டும்) அல்லது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றோா் விண்ணப்பிக்கலாம்.
வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன், தரவு பகுப்பாய்வில் தோ்ச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். தன்னிச்சையாகவும், குழுவாகவும் இணைந்து பணிபுரியும் திறன் கட்டாயம். முன்னனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை. மாதம் ரூ.50,000- தொகுப்பூதியமாக வழங்கப்படும். இப்பணிக்கான விண்ணப்பத்தை ஒரு வெள்ளைத்தாளில் சுயவிவரங்களுடன் தட்டச்சு செய்து அனைத்து கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை கண்டிப்பாக இணைத்து இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் புள்ளியியல் துணை இயக்குநா், மாவட்டப் புள்ளியியல் அலுவலகம், அறை எண். 203, 2 ஆம் தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.