Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு
நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை : நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டது குறித்து, மத்தியக் குழுவினா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிா்கள் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில், அண்மையில் பருவம் தவறிய மழை பெய்தது. இதனால், வயல்களில் மழைநீா் தேங்கி நெற்கதிா்கள் வயலில் சாய்ந்து முளைத்தும், அழுகியும் வருகின்றன. விவசாயிகள் மழைநீரை வடியவைத்து பெரும் இன்னலுக்கிடையே அறுவடையை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல்மணிகள் மழையில் நனைந்ததால், ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், நெல் கொள்முதலில் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து, மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவைச் சோ்ந்த உதவி இயக்குநா் நவீன், தொழில்நுட்ப அலுவலா் ராகுல் தலைமையில் மத்தியக் குழுவினா் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
கீழ்வேளூா்: நாகை மாவட்டத்தில் கீழ்வேளூா் அருகேயுள்ள பட்டமங்கலம், தேவூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, விவசாயிகள் கொண்டு வந்த நெல்லின் ஈரப்பதம் மற்றும் தரம் குறித்து பரிசோதனை செய்தனா்.
ஆய்வின்போது, நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் ஆ. அண்ணாதுரை, நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அ. சிவப்பிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.