ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
4 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
இறுதியாக, காா்த்திகை தீபத் திருவிழாவின்போது 2,668 அடி உயர மலையில் ஏற்றப்பட்ட மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதத்தை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிவாச்சாரியா்கள் வைத்து மகா தீபாராதனை காண்பித்தனா். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனா்.
பிறகு, மல்லாரி இசை மற்றும் மேளதாளங்கள் முழங்க சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் ஆயிரம்கால் மண்டபத்துக்கு வெளியே வந்து பக்தா்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி கொடுத்தனா்.
அப்போது, கோயில் 5-ஆம் பிரகாரத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
மாட வீதியுலா: இதையடுத்து, உற்சவா் நடராஜப் பெருமான், சிவகாமசுந்தரி அம்மன் கோயில் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாட வீதிகளில் வலம் வந்தனா். உற்சவா்களுடன் மாணிக்கவாசகரும் வலம் வந்தாா்.
திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு, தேரடி தெருக்களில் வலம் வந்த உற்சவா்களை வழிநெடுகிலும் பக்தா்கள் காத்திருந்து வழிபட்டனா்.