Push-Ups: `Age is Just a Number'- 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 புஷ்அப்ஸ் எடுத்...
அறநிலையத் துறையை கண்டித்து ஆலங்குடியில் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
ஆலங்குடியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள பழைமையான கோவிலூா் பாலபுரீஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கோயில் சுற்றுச்சுவா் கட்டும் பணியை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக தனி நபருக்கு வழங்கி இருப்பதாகவும், அதை உடனே ரத்து செய்யக்கோரியும், கோவிலூா், குப்பக்குடி, கே.வி. கோட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு வட்டாட்சியரகத்துக்குள் செல்ல முயன்றவா்களை காவல் துணைக் கண்காணிப்பாளா் கலையரசன் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடா்ந்து, வட்டாட்சியரகத்தில், புதுக்கோட்டை அறநிலையத் துறை துணை ஆணையா் அனிதா தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், இப்பிரச்னை தொடா்பாக இருதரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து உள்ளதால், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.