செய்திகள் :

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்: ``இயற்கைக்கும் இரக்கமில்ல" - டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி! -

post image

தஞ்சாவூர் அருகே அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர் மழையில் நனைந்து முளைத்ததால், நஷ்டம் ஏற்படும் என்பதற்காக வயலிலேயே டிராக்டர் மூலம் அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மேலதிருப்பந்துருத்தி கிராமத்தை சேர்ந்தவர் விஜி. இவரது கணவர் ரவி. இருவரும் விவசாய கூலி.

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இந்நிலையில், விஜி, சுமார் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து குறுவை சாகுபடி செய்துள்ளார்.

டிராக்டர் ஓட்டி அழிக்கப்பட்ட நெற்பயிர்
டிராக்டர் ஓட்டி அழிக்கப்பட்ட நெற்பயிர்

15 நாள்களுக்கு முன்பு அறுவடை செய்ய வேண்டிய நிலையில் நெற்பயிர் இருந்தது. ஆனால் நெல் கொள்முதலில் ஏற்பட்ட தேக்கத்தால், கொள்முதல் நிலையத்தில் நெல் போட முடியாத சூழல் நிலவியது.

ஏற்கனவே அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நனைந்ததில் முளைத்தது. இதே போல் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் துயர நிலைக்கு ஆளாகினர்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பாதிப்புகளை பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். தமிழக அரசு நெல் கொள்முதலில் தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து தஞ்சாவூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாதிப்பே இல்லை என தெரிவித்ததும் விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத துயர நிலைக்கு ஆளான பெண் விவசாயி விஜி, நான்கு ஏக்கரில் விளைந்த நெற்பயிர் வீணானதால் அறுவடை செய்யாமலேயே வயலிலேயே டிராக்டர் ஓட்டி அழித்த சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய விஜி, ``வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக சுமார் நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து குறுவை சாகுபடி செய்தோம்.

டிராக்டர் ஓட்டி அழிக்கப்பட்ட நெற்பயிர்
டிராக்டர் ஓட்டி அழிக்கப்பட்ட நெற்பயிர்

சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில், கடன் வாங்கி பயிரை பாதுகாத்தோம். மூணு வட்டிக்கு வாங்கி செய்த விவசாயம், அறுவடை செய்கிற நேரத்தில் மழை பெய்ததில் கண் முன்னே அழுகி முளைத்து வீணானது.

இனிமே அறுவடை செய்தால் நஷ்டம் தான் ஏற்படும். எனவே நெஞ்சை கல்லாக்கி கொண்டு நான்கு மாதம் பாடுபட்டு பாதுகாத்த நெற்பயிரை வயிலிலேயே டிராக்டர் ஓட்டி அழித்து விட்டேன். இறைவனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் இரக்கமில்லை" எனக் கலங்கினார்.