Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
'சீனியர்கள் எனக்கு செய்ததை இளம் வீரர்களுக்கு நான் செய்யப்போகிறேன்!' - ரோஹித் மகிழ்ச்சி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த மூன்றாவது ஓடிஐ போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அணியின் சூப்பர் சீனியர் வீரரான ரோஹித் சதமடித்து அசத்தியிருந்தார். அவருக்கே ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டிருந்தது.

விருதை வாங்கிவிட்டு ரோஹித் பேசுகையில், 'ஆஸ்திரேலியாவில் போட்டிகள் எப்போதும் இவ்வளவு கடினமாகத்தான் இருக்கும். அந்த அணி தரமான பந்துவீச்சாளர்களை கொண்ட அணி. களத்தையும் சூழலையும் சரியாக உள்வாங்கிக் கொண்டு ஆடினால் மட்டுமே உங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட முடியும். எனக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை செய்யவே விரும்புகிறேன். நான் நீண்ட நாட்களாக போட்டிகளில் ஆடவில்லை. இங்கே வருவதற்கு முன்பு முன் தயாரிப்புப் பணிகளில் அதிக நேரம் செலவிட்டேன். அதனால் என்னுடைய ஆட்டம் சார்ந்து கொஞ்சம் நம்பிக்கையோடுதான் இந்த சீரிஸூக்குள் வந்தேன். நாங்கள் இந்த சீரிஸை வெல்லவில்லை. ஆனால், இங்கிருந்து எடுத்து செல்ல நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருக்கிறது.
இது ஒரு இளம் அணி. நிறைய வீரர்கள் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ஆடியதில்லை. நான் முதல் முதலாக ஆஸ்திரேலியா வந்தபோது அணியின் சீனியர்கள் எப்படி உதவினார்கள் என்பது இன்னமும் நியாபகமிருக்கிறது. இப்போது இது எங்களுடைய நேரம். இளம் வீரர்களுக்கு சரியான செய்திகளையும் உத்வேகத்தையும் நாங்கள் கடத்திவிட வேண்டும். இந்த இளம் வீரர்கள் திறமையானவர்கள். அவர்கள் எப்படி ஆட நினைக்கிறார்கள் என்பதை முதலில் அவர்களே புரிந்துகொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலியா மாதிரியான இடங்களுக்கு வருவதற்கு முன்பே நீங்கள் எப்படி ஆடப்போகிறீர்கள் என்பதைப் பற்றிய கேம்ப்ளான் உங்களிடம் இருக்க வேண்டும். நான் இங்கே நிறைய கிரிக்கெட் ஆடிவிட்டேன். இங்கிருந்து திரும்பிச் சென்று கிரிக்கெட்டின் அடிப்படையான விஷயங்களில் கூட கவனம் செலுத்தி பயிற்சி செய்வேன். அதைத்தான் இளம் வீரர்களுக்கான செய்தியாகவும் கூற விரும்புகிறேன். என்னுடைய செயல்களில் நான் மகிழ்ச்சியாக திருப்தியாக உணர்கிறேன். தொடர்ந்து இதையே செய்துகொண்டிருக்கவும் விரும்புகிறேன்.' என்றார்.

















