Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
RoKo : 'ரோஹித்தின் கிடாக்கறி விருந்து; கோலியின் கம்பேக்! - அதிர்ந்த சிட்னி!
'RoKo வுக்கான சவால்!'
பெரும் அனுபவமுள்ள இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்த இரண்டு வீரர்களுக்கு முன்பாக, கிட்டத்தட்ட இதுதான் உங்களின் கடைசி வாய்ப்பு என்பதைப் போல ஒரு போட்டியைக் கொடுத்தால் அவர்கள் எப்படி ஆடுவார்கள் என்பதை ரோஹித்தும் கோலியும் காட்டியிருக்கின்றனர். சிட்னியில் அரங்கம் அதிர சதமடித்து ரோஹித் ஒரு கிடாக்கறி விருந்து படைக்க, கோலி அவருக்கு ஒத்துழைத்து ஆடி கம்பேக் கொடுத்திருக்கிறார்.

இந்தத் தொடருக்கு முன்பாக ரோஹித்தின் கேப்டன்சி திடீரென பறிக்கப்பட்டது. கில் இந்திய அணியின் புதிய கேப்டன் ஆக்கப்பட்டார். ரோஹித்தும் கோலியும் 2027 உலகக்கோப்பை வரை ஆடுவார்கள் என்பதற்கு தேர்வுக்குழு தலைவர் அகர்கர் எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட இந்த ஆஸ்திரேலிய தொடர்தான் இருவருக்கும் கொடுக்கப்படும் கடைசி வாய்ப்புப் போல பார்க்கப்பட்டது.
'ஏமாற்றமான ஆட்டம்!'
தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடினால், வேறு வழியின்றி அணியில் வைத்துக் கொள்வார்கள். இல்லையேல், இந்தத் தொடரின் பெர்பார்மென்ஸை காரணம் காட்டியே ஒதுக்கி தள்ளுவார்கள். ரோஹித், கோலி இருவருக்குமே 2027 உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வென்று கொடுக்க வேண்டும் என்பது கனவு. அப்படியிருக்க இந்த வாய்ப்பை இறுக்கமாக பற்றிக் கொள்ள இருவரும் நினைத்தனர்.

ஆனால், அவர்கள் நினைத்ததைப் போல அவ்வளவு எளிதாக இந்தத் தொடர் அமையவில்லை. கோலி முதல் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட். ரோஹித் ஒரு அரைசதம் அடித்திருந்தாலும், கடுமையாக திணறியிருந்தார். ஹேசல்வுட் அவரை திக்குமுக்காட செய்திருந்தார். பெர்த், அடிலெய்டு இரண்டுமே ரோஹித்திக்கும் கோலிக்கும் நம்பிக்கையை கொடுக்கவில்லை. ஏமாற்றத்துடனேயேதான் வெளியேறினர். சிட்னி போட்டி கிட்டத்தட்ட அவர்களது கரியரின் நாக் அவுட்டை போன்றே பார்க்கப்பட்டது.
இன்னொரு புறம் ஒரு ட்ரெண்ட்டையும் கவனிக்க வேண்டியிருந்தது. தோனி, ரோஹித், கோலி என எல்லோருமே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு பிறகே ஓய்வு முடிவை எடுத்திருக்கின்றனர். ஒரு ஆஸ்திரேலிய தொடர் அவ்வளவு கடினமானது. உளவியல்ரீதியாக வீரர்களை உடைத்துப் போட்டுவிடும். இதெல்லாம் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கவேதான் ரோஹித்தும் கோலியும் இன்று களமிறங்கினர்.

கடந்த இரண்டு போட்டிகளிலுமே ஹேசல்வுட்டின் பந்துகளை தொட்டு டிபன்ஸ் கூட ஆட முடியாமல் ரோஹித் அவதிப்பட்டார். இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் அவரை எதிர்கொள்ள ரோஹித் அத்தனை அவசரப்படவில்லை. வாய்ப்புக்காக காத்திருந்தார். இன்னொரு முனையில் வீசியவர்களை அட்டாக் செய்தார். சிட்னி பிட்ச் எப்போதுமே பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். இன்றைக்கும் பௌலர்களுக்கு உதவும் வகையில் எந்த கூறும் இல்லை. இதனால் பந்தை திருப்ப முடியாமல் ஆஸி பௌலர்கள் திணறினர்.
ரோஹித் முதல் ஓவரிலேயே ஒரு ரிஸ்ட் ப்ளிக்கின் மூலம் ஸ்டார்க்கின் டெலிவரியை பவுண்டரியாக்கி அற்புதமாக தொடங்கினார். ஸ்டார்க்கின் ஸ்பெல்லை சீக்கிரம் முடித்துவிட்டு நேதன் எல்லிஸை இறக்கினார் மார்ஶ். அவரையும் அட்டாக் செய்தார் ரோஹித். அவர் வழக்கம் போல அடிக்கும் Stand & Deliver ஷாட்களை இன்றுதான் கனக்கச்சிதமாக அடித்த்தார். ஹேச்ல்வுட்டுக்குமே முதல் இரண்டு மூன்று ஓவர்களுக்கு மேல், பந்தை திருப்ப பிட்சிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனால் ஹேசல்வுட்டையும் க்ளீன் ஹிட்டாக பவுண்டரியாக்கினார் ரோஹித்.

நம்பர் 3 இல் கோலி வந்தார். கோலி க்ரீஸூக்குள் வருகையில் இந்திய அணியின் வெற்றிக்கு 168 ரன்கள் தேவைப்பட்டது. கடந்த இரண்டு போட்டியிலும் கோலி டக் அவுட் ஆகியிருந்தார் இல்லையா? இந்தப் போட்டியில் ஹேசல்வுட்டின் ஓவரில் தட்டிவிட்ட முதல் ரன்னை எடுத்த உடனேயே காற்றில் ஒரு பன்ச் விட்டு ஜாலியாக செலிபிரேட் செய்தார். இன்னிங்ஸ் முழுவதுமே இதே மாதிரியாக குதூகலமான மனநிலையில்தான் கோலி இருந்தார். ரோஹித் அரைசதத்தை கடந்த பிறகு கியரை மாற்ற தொடங்கினார்.
'ரோஹித் சதம்; கோலி அரைசதம்!'

லாங் ஆப், ஸ்கொயர், பாய்ண்ட் ஆகிய திசைகளில் ஷாட்களை துல்லியமாக கனெக்ட் செய்து மிரட்டினார். ஷம்பாவின் ஓவரில் சிங்கிள் தட்டி சதத்தையும் நிறைவு செய்தார். ரோஹித்துக்கு நன்றாக ஒத்துழைத்து Complement செய்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டே இருந்தார் கோலி. அவ்வபோது பவுண்டரிகளை அடிக்கவும் தவறவில்லை. இதனால் கோலியும் அரைசதத்தை கடந்தார். இருவருக்கும் பெரும் ஆசுவாசத்தை கொடுத்த இன்னிங்ஸ் இது. இறுதியாக கோலி நேதன் எல்லிஸின் பந்தில் ஃபைனாக தேர்டு மேனில் பவுண்டரியை தட்டிவிட்டு போட்டியை வென்று கொடுத்தார்.
ரோஹித், கோலி இருவருக்குமே கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இது. இனி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள யதார்த்த வாய்ப்புகள் இல்லை. ஆஸ்திரேலியாவில் இதுதான் அவர்களுக்கு Farewell போட்டி. அதுவும் பெரும் அழுத்தத்துக்கு மத்தியில். 38 வயதில் ரோஹித்தும் 36 வயதில் கோலியும் தங்களை அணி நிர்வாகத்துக்கு மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். Ageing like a fine wine!

















