எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
அள்ளிக் கொடுக்கும் மெட்டா! ஆப்பிள் முன்னாள் ஊழியருக்கு ரூ.1,715 கோடி சம்பளத்தில் வேலை!
மெட்டாவில் பணிபுரிய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு ரூ.1,715 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில் பணிபுரிய ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொறியாளர் ருவோமிங் பாங்குக்கு (Ruoming Pang) அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மெட்டாவில் பணிபுரிய அவருக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,715 கோடி) வழங்கப்படுவதாகவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மாதம் ரூ.142 கோடி சம்பளத்தில் ருவோமிங் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியான திரபித் பன்சாலும் மெட்டா நிறுவனத்தில் பணிபுரிய தேர்வாகியதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. மெட்டாவின் அறிவிப்பின்படி, இவருக்கு ஆண்டுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ.853.3 கோடி) சம்பளம் வழங்கப்படலாம்.
மெட்டா நிறுவனத்தில் செய்யறிவுப் பிரிவை வலுப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உலகளவிலான பெரிய நிறுவனங்களில் மனிதர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, செய்யறிவின் உதவியை நாடி வருகின்றனர். அந்த வகையில், மெட்டா நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
ஆனால், தற்போது செய்யறிவுப் பிரிவில் சிறந்து விளங்குபவர்களை, தனது நிறுவனத்தில் பணிபுரிய மெட்டா அழைப்பு விடுத்திருந்தது.
மெட்டா நிறுவனத்தின் புதிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் (Superintelligence) ஆய்வகத்துக்காக ஓபன்ஏஐ, கூகுள் டீப்மைன்ட், ஆப்பிள், ஆன்த்ரோபிக் (Anthropic) ஆகிய முன்னணி செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து 11 ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.