Aravind Srinivas: 'Google Chrome'-யை விலை பேசும் தமிழ் பையன்; யார் இந்த அரவிந்த்...
அவசர ஆலோசனையில் கே.என். நேரு, சேகர் பாபு; அதிகரிக்கப்படும் காவலர்கள்! - ரிப்பன் பில்டிங் அப்டேட்!
தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுநல வழக்கு ஒன்றில், போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களைக் கலைந்து செல்லும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில், ரிப்பன் மாளிகைக்கு வெளியே போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது
நிலைமை தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமைச்சர்கள் போராட்டக்குழுவை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கின்றனர். இப்போதைய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

உயர் நீதிமன்றத்தில் போராட்டம் சார்ந்து இரண்டு வழக்குகள் விசாரணைக்கு வருவதாக இருந்தது.
இந்த வழக்கு விசாரணைகளில் நீதிமன்றமே போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லச் சொல்லி அறிவுறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, பெண் ஒருவர் போராட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களுக்குப் பாதிப்பு உண்டாவதாகத் தொடுத்த மனுவில், உயர் நீதிமன்றம் போராட்டக்காரர்களைக் கலைக்க உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் ரிப்பன் மாளிகை முன்பாக காவலர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
காவலர்களின் strength சம்பந்தமாக முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறிய காவல் ஆய்வாளர்களைப் பெண் உயரதிகாரி ஒருவர் கடுமையாகக் கண்டித்து காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்துமாறு உத்தரவிட்டார்.
பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் மதியம் 1:15 மணியளவில் ரிப்பன் மாளிகைக்கு வந்தனர்.

கே.என்.நேரு முதற்கட்ட பேச்சுவார்த்தையில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்.
அதன்பிறகு, போராட்டக்குழுவுடன் நடந்த பலகட்டப் பேச்சுவார்த்தைகளும் சேகர் பாபு தலைமையிலேயே நடந்தது.
இந்நிலையில், போராட்டத்தின் முக்கியமான இன்றைய நாளில் கே.என்.நேருவும் ரிப்பன் மாளிகைக்கு வந்தது முக்கியமாகப் பார்க்கப்பட்டது.

இவர்கள் மூவரும் 45 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்திவிட்டு, மீண்டும் உட்கார்ந்து பேசுவோம் எனப் போராட்டக்குழுவுக்கு மெசேஜ் பாஸ் செய்திருக்கின்றனர்.
போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் நிர்வாகிகள் இப்போது உயர் நீதிமன்றத்தில் இருக்கின்றனர்.
அரசுக்கு எதிராக அவர்கள் தொடுத்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது.
அதை முடித்துவிட்டுத்தான் அவர்கள் அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு வருவார்கள். 'நாங்கள் அதுவரைக் காத்திருக்கிறோம்.' என அமைச்சர்கள் தரப்பும் இசைவு காட்டியிருக்கிறது.