NEEK : `கண்ணில் கனவோடு காத்துட்டு இருக்காங்க; படம் ஜாலியாக இருக்கும்..' - இயக்கு...
ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்; ஜே.சி.பி முன்பு குழந்தையோடு அமர்ந்த பெண்கள்! - கரூர் களேபரம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த்தாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த அரசு புறம்போக்கு நிலத்தை அதிகாரிகள் மூலம் கடந்த ஆண்டு மீட்கப்பட்டது. அந்த இடத்தில் பொது கழிவறை கட்டுவதற்கு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக, டெண்டர் முடிந்த பிறகு தற்போது அந்த இடத்தில் கழிவறை கட்டுவதற்கான பணி இன்று தொடங்கியது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் அவரது தம்பி இளையராஜா ஆகியோர், ‘இது எங்களுக்குச் சொந்தமான இடம். எனவே, இங்கு கழிவறை கட்டக்கூடாது’ என்று தடுத்து நிறுத்தினர்.
மேலும், இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கைக்குழந்தையுடன் ஜே சி பி இயந்திரத்தின் முன்பு அமர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர். இளையராஜா மற்றும் வழக்கறிஞர் செந்தில் ஆகிய இருவரும் போலீஸார் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மாயனூர் காவல் நிலைய போலீஸார் இளையராஜா மற்றும் வழக்கறிஞர் செந்திலை கைது செய்தனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் அரசு அதிகாரியுடன் சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி பொது கழிவறை அமைக்க அரசு அதிகாரிக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்தில் இரு தரப்பு ஆவணங்களையும் சரிபார்த்தார். பின்பு, ‘இது அரசுக்கு சொந்தமான இடம்’ என்பதை உறுதி செய்து கழிவறை கட்டும் பணி தொடங்க பாதுகாப்பளித்தார். அதனைத் தொடர்ந்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் அஸ்திவாரம் எடுக்கும் பணி நடந்தது. இந்த சம்பவத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் அந்தப் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.