`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
விருதுநகர்: அரசுப் பள்ளி சத்துணவு மையத்தில் திடீர் ஆய்வு; சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்..!
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது பள்ளியின் சத்துணவு மையத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 293 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தினமும் 60 பயனாளிகளுக்கு மட்டுமே பள்ளியில் மதிய உணவு தயார் செய்யப்பட்டு வழங்கி வந்தது கண்டறியப்பட்டது.

மேலும் கடந்த இரண்டு மாதங்களாக உணவுப்பொருள்கள் சத்துணவு மையத்தில் இருப்பு பதிவேடு, ரொக்கப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படாமல் மதிய உணவு தரமற்றதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், காய்கறி சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொள்ளப்படாமலும், சத்துணவு அறையின் உள்பகுதி சுகாதாரமற்ற நிலையிலும், சமையல் பாத்திரங்கள் சுத்தமற்ற நிலையிலும் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை தயார் செய்து அனுப்பினர். அதன்படி, ஆவுடையாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் கவிதா என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.