18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நியாயவிலைக்கடை கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், பொது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் பொது மக்கள் நீண்ட தூரம் பயணித்து மடவாளம் பகுதியில் உள்ள சிறிய நியாய விலை கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
மாடப்பள்ளி பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காகப் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராததால், திருப்பத்தூர் டவுன் பகுதியில் உள்ள மடவாளம் பகுதிக்குச் சென்று அங்கு உள்ள நியாய விலை கடையில் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் பொது மக்கள், “எங்கள் கிராமத்திற்காக நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த புதிய நியாய விலை கட்டடம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இது வரையில் அந்த புதிய நியாய விலை கடை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. இது சம்பந்தமாக கூட்டுறவுத்துறை அலுவலகம், வட்டாட்சியர் வரையில் நாங்கள் கோரிக்கை மனு அளித்து இருந்தோம். ஆனால் எந்த வித பயனும் இல்லை. நாங்கள் உணவுப் பொருட்களை வாங்க நெடுந்தூரம் பயணித்து மடவாளம் பகுதியில் உள்ள சிறிய அளவிலான நியாய விலை கடைக்குச் சென்று வர வேண்டி உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க நாங்கள் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளது.
எங்கள் ஊரிலேயே ஒரு பெரிய நியாய விலை கடை இருந்தும் நாங்கள் மடவாளம் நியாய விலை கடைக்குச் செல்ல வேண்டி உள்ளது. உடனடியாக எங்கள் பகுதியில் உள்ள நியாய விலை கடையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அப்போது தான் எங்கள் பிரச்னை தீரும்” என்றனர்.
இது குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, “மாடபள்ளியில் உள்ள நியாய விலைக் கடை சில நிர்வாக காரணங்களுக்காகத் திறக்கப்படாமல் உள்ளது. கூடிய விரைவில் அதனைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முயற்சிகளை எடுக்கிறோம்” என்று கூறினர்.

மாடபள்ளி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் நியாய விலை கடையை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. நிறைவேற்றுவார்களா துறை ரீதியான அதிகாரிகள்?