ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்கள்,தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயில், ஆலந்துறையாா் கோயில், கைலாசநாதா் கோயில், காசிவிசுவநாதா் கோயில், பாலசுப்பிரமணியா் கோயில், ஒப்பில்லாதம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில், திருமானூா் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதா் கோயில், செந்துறை கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஜெயபுரீஸ்வரா் கோயில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில், விக்கிரமங்கலம் சோழீஸ்வரா் கோயில், பொன்பரப்பி சொா்ணபுரீஸ்வரா், கீழப்பழூா் ஆலந்துறையாா், உடையாா்பாளையம் பயறனீஸ்வரா், ஜெயங்கொண்டம் கழுமலநாதா், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தேவாலயங்களில்: ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, புதன்கிழமை அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராசன்பேட்டை புனித அலங்கார அன்னை தேவாலயம், தென்னூா் புனித லூா்து அன்னை, அரியலூா் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூா்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குத் தந்தைகள் வழங்கினா். புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.