ஆண்டிமடம் அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் வெளிநாட்டினா் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன், வெளிநாட்டினா் தமிழா்களின் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடினா்.
ஆண்டிமடத்தில் செயல்பட்டு வரும் ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், அமெரிக்காவை சோ்ந்த மருத்துவா்கள் கோயன் வான் ராம்பே, வொ்லி, ராபின் உள்ளிட்டோா் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.
அவா்கள், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து, அடுப்பில் மண் பானை வைத்து பொங்கல் தயாரித்தனா். பின்னா் அதை படையலிட்டு, செங்கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் கொத்து, மலா்களை வைத்து, சூரிய பகவானை வணங்கி கொண்டாடினா்.
அப்போது அங்கிருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அவா்கள் கலந்துரையாடி அவா்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனா்.
தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையில் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலைகளை விரும்பி அணிந்து கொண்டாடியதாகவும், தங்களுக்கு இது மிகவும் பிடித்து இருந்ததாகவும், சமத்துவப் பொங்கல் விழாவில் நாங்கள் பங்கேற்றது எங்களால் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.