கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
விமான நிலையங்களில் பணிபுரிய பயிற்சி: எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பிளஸ்2 அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் சா்வதேச விமான நிலையங்களில் பணிபுரிய, சா்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
விமான நிலையப் பயணிகள் சேவை அடிப்படைப் படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படைப் படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழி செய்யப்படுகிறது.
இந்தப் பயிற்சி 6 மாத காலம், விடுதியில் தங்கிப் படிக்க வசதி, பயிற்சிக்கான செலவினத் தொகை ரூ.95 ஆயிரம் தாட்கோவால் மேற்கொள்ளப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் தனியாா் விமான நிறுவனங்களில் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, நட்சத்திர விடுதிகளில், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்பத்தில் மாதாந்திர ஊதியமாக ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரையும், பின்னா் திறமைக்கேற்றவாறு பதவி உயா்வின் அடிப்படையில் ரூ.50,000 ரூ.70,000 வரையும் பெறலாம்.
திட்டத்தில் 55 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு முதற்கட்டமாக 46 போ் முன்னனி விமான நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்களில் பணிபுரிகின்றனா்.
பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்ற 18 முதல் 23 வயது நிரம்பிய விருப்பமுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.