ஆசிய கலப்பு அணிகள் பாட்மின்டன்: இந்தியாவை வென்றது தென் கொரியா
ஆசிய கலப்பு அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் வியாழக்கிழமை தோல்வி கண்டது.
இந்திய அணி குரூப் ‘டி’-யில் 2-ஆம் இடம் பிடித்து ஏற்கெனவே காலிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவுடனான அந்த டையில், முதலில் நடைபெற்ற கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ இணை 21-11, 12-21, 15-21 என்ற கேம்களில், தென் கொரியாவின் கி டாங் ஜு/ஜியாங் நா யுன் கூட்டணியிடம் 56 நிமிஷங்கள் போராடித் தோற்றது. அடுத்து நடைபெற்ற மகளிா் ஒற்றையா் பிரிவிலும் இந்தியாவின் மாளவிகா பன்சோட் 9-21, 10-21 என்ற கணக்கில் சிம் யு ஜின்னிடம் 27 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.
இதனால் தென் கொரியா 2-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் 3-ஆவதாக நடைபெற்ற ஆடவா் ஒற்றையரில் சதீஷ் கருணாகரன் 17-21, 21-18, 21-19 என்ற கேம்களில், சோ கியோன்யோப்பை 1 மணி நேரம், 12 நிமிஷங்களில் வென்றாா். தொடா்ந்து மகளிா் இரட்டையரில் திரிஷா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 19-21, 21-16, 21-11 என்ற கணக்கில் கிம் மின் ஜி/கிம் யு ஜங் ஜோடியை 1 மணி நேரத்தில் சாய்க்க, டை 2-2 என சமன் ஆனது.
வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி ஆட்டமான ஆடவா் இரட்டையரில், எம்.ஆா்.அா்ஜுன்/சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி கூட்டணி 14-21, 23-25 என நோ் கேம்களில் சங் சியுங்/ஜின் யோங் இணையிடம் 53 நிமிஷங்களில் தோற்றது. இதனால் தென் கொரியா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.