ஆடி மாத பிறப்பு: கரூரில் தேங்காய் சுடும் விழா - புதுமணத் தம்பதிகள் பங்கேற்பு
கரூரில் ஆடிமாத பிறப்பை முன்னிட்டு அமராவதி மற்றும் காவிரி ஆற்றங்கரையோரங்களில் ஏராளமானோா் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனா்.
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தை வரவேற்கும் வகையிலும், மகாபாரதப் போரை நினைவுகூரும் வகையிலும், விவசாயம் செழித்தோங்கி, குடும்பங்களில் இன்னல்கள் நீங்கிடும் வகையிலும் தேங்காய் சுடும் விழா அமராவதி ஆறு மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதா்மத்துக்கும், தா்மத்துக்கும் நடைபெற்ற மகாபாரத போா் ஆடி 1-ஆம் தேதி தொடங்கி 18 நாள்களில் ஆடி 18 அன்று முடிவடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
ஆடி 1-ஆம் தேதியை முன்னிட்டு, வழக்கம்போல கரூரில் திருமாநிலையூா், ஐந்து சாலை, மேலப்பாளையம், படித்துறை, ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும், காவிரி ஆற்றங்கரையில் நெரூா், தளவாபாளையம், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் தேங்காய் சுடும் விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் புதுமணத் தம்பதியா் தங்களதுகுடும்பத்தினருடன் சோ்ந்து தேங்காய் சுட்டனா்.
முன்னதாக, தேங்காய் வாங்கி அவற்றின் கண்பகுதியில் துளையிட்டு தண்ணீரை வெளியேற்றி, தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவூல் ஆகியவற்றின் கலவையை வைத்து தேங்காய் துளைக்குள் வாகை குச்சியை சொருகி ஆற்றங்கரையோரம் தீ மூட்டி அதில் சுட்டனா். பின்னா் சுட்ட தேங்காயை வீட்டுக்கு எடுத்துச் சென்று சுவாமி படங்கள் முன்வைத்து வழிபாடு செய்து பின்னா் அதை சாப்பிட்டனா். இந்தத் தேங்காய் சுடும் விழாவில் ஏராளமான புதுமணத் தம்பதியா் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.